இந்திய ரயில்வே பெட்டிகள் உற்பத்திப் பிரிவு (Coach Manufacturing unit) 2019-20ஆம் நிதியாண்டில் சுமார் 8,000 பெட்டிகளைத் தயாரிக்க உள்ளதாகவும், அடுத்த ஆண்டு 10,000 பெட்டிகளைத் தயாரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் உற்பத்திப் பிரிவில் 30 விழுக்காடு அதிகரிக்கலாம் என்றும் இதனை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இது குறித்து ரயில்வே உயர் அதிகாரி ராஜேஷ் அகர்வால்,’ பெட்டிகளைத் தவிர ரயில்களின் பிற பாகங்கள், சக்கரங்கள் போன்றவற்றைத் தயாரித்து ஏற்றுமதி செய்யவுள்ளோம். தற்போது, எங்கள் ஏற்றுமதி குறைவாகவே உள்ளது. அதனால் அண்டை நாடான பங்களாதேஷ், இலங்கையை குறிவைத்துள்ளோம். எதிர்பார்க்காத விதமாக வட அமெரிக்காவில் உள்ள நாடுகளிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘இந்திய ரயில்வேயின் ஒருங்கிணைந்தப் பெட்டிகள் தொழிற்சாலை (The Integral Coach Factory) 2019-20ஆம் ஆண்டில் 4,000 பெட்டிகளை உற்பத்தி செய்யும் இலக்கை பூர்த்தி செய்ய உள்ளது. ஏனெனில் இது கடந்த ஆண்டு 3,262 பெட்டிகளை வெறும் 215 நாட்களில் உற்பத்தி செய்துள்ளது. வரவிருக்கும் ஆண்டுகளில், இந்திய ரயில்வே தொழில்நுட்பத்தின் மூலம் பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த ரயில் பயணத்தை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்’ எனக் கூறினார்.