11- ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தண்டவாளத்தில் விழுந்த பந்தை எடுக்க முயற்சிக்கும் போது ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள பூம்புகார் நகரில் ரமேஷ் என்ற பெயிண்டர் வசித்து வருகிறார். இவருக்கு ராகுல் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள மைதானத்தில் ராகுல் கிரிக்கெட் விளையாடியுள்ளார். இதனையடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது பந்தானது அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் விழுந்து விட்டது.
இதனால் ராகுல் கவனக்குறைவாக தண்டவாளத்தில் விழுந்து கிடந்த பந்தை எடுக்க முயற்சி செய்த போது, அவ்வழியாக வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் ராகுலின் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராகுல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த கொருக்குப்பேட்டை ரயில்வே காவல்துறையினர் ராகுலின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.