சென்னை மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மாநகராட்சி விதிகளின்படி ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்திலும் சொத்து வரி செலுத்தப்பட வேண்டும். இதில் முதல் 15 நாட்களுக்குள் வரி செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடி அல்லது 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். நடப்பு அரையாண்டில் கடந்த 1-ம் தேதி முதல் சொத்து வரியானது செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 18-ஆம் தேதி வரை 5.17 லட்சம் பேர் நிலுவை இல்லாமல் செத்து வரியை செலுத்தியுள்ளனர். முதல் 15 நாட்களுக்குள் சொத்து வரி செலுத்துபவர்களுக்கு 4.67 கோடி ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
தாமதமாக வரி செலுத்துபவர்கள் 2 சதவீதம் தனி வட்டி செலுத்த வேண்டும். இந்நிலையில் சொத்து வரி செலுத்தாதவர்களுக்காக நவம்பர் 15-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசத்திற்குள் சொத்து வரியை செலுத்தி தனிவட்டி விதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளுங்கள். மேலும் சொத்து வரியை வருவாய் அலுவலர், சென்னை மாநகராட்சி என்ற பெயரில் எவ்வித கட்டணமும் இன்றி வங்கிகள் மூலமாகவோ, இணையதளத்தில் பேடிஎம் மற்றும் நம்ம சென்னை போன்ற செயலிகளை பயன்படுத்தியோ, காசோலைகள் மூலமாகவோ, கடன் அல்லது பற்று அட்டை மூலமாக மாநகராட்சி வரி விதிப்பவர்களிடம் செலுத்தி வரி செலுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.