பிலிப்பைன்ஸில் விடாமல் பெய்து கொண்டிருக்கும் கனமழையால் 9 பேர் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக பிலிப்பைன்ஸில் கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் வடக்கு பிலிப்பைன்ஸில் சேதங்கள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே வானிலை அதிகாரிகள் சுமார் 315 கிலோ மீட்டர் தூரத்தில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் தென் சீன கடலில் காகயன் மாகாணத்திற்கு மேற்கு வெப்பமண்டல புயல் காற்று வீசியதாக தெரிவித்துள்ளனர். இதனால் சாலைகளில் மரங்கள் விழுந்ததில் மின்சார சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து தடை மற்றும் மின்சார சேவை துண்டிப்பு ஆகியவற்றின் காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில் பெங்குவாட் பகுதியில் மழையால் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவால் காவலர் ஒருவர் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் திடீரென ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் நான்கு பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து வெள்ளத்தில் மாயமான நான்கு பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்கிடையே சுமார் 1,600-க்கும் மேற்பட்டவர்கள் கடும் வெள்ளம் காரணமாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸை சுமார் இருபது புயல்கள் ஒவ்வொரு ஆண்டும் குறி வைத்து தாக்குவது குறிப்பிடத்தக்கது ஆகும்.