ஊர் அடங்கிய சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கடந்த மே மாதம் 10-ம் தேதி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் 50 சதவீத பயணிகளுடன் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து 50 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டது. இதனையடுத்து விழுப்புரம் கோட்டத்திற்கு உட்பட்ட 126 பேருந்துகளில் 24 டவுன் பேருந்துகள், 35 புறநகர் பேருந்துகள், தர்மபுரி கோட்டத்திற்கு உட்பட்ட 91 பேருந்துகள் இயக்கப்பட்டது.
ஆனால் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. எனவே சுமார் 50 நாட்களுக்கும் மேலாக பேருந்து போக்குவரத்து சேவை இயங்காத நிலையில் தற்போது பேருந்து தொடங்கி இருப்பதால் பயணிகள் வெளியூர்களுக்கும், அலுவலகங்களுக்கும் சென்று வந்தனர். அதன்பின் பயணிகள் வருகையை பொருத்து கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு ஜவுளிக்கடை, நகைக்கடை போன்ற அனைத்து கடைகளும் திறக்கப்பட்டதால் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.