கொல்கத்தாவில் வணிக வளாகத்தில் மாஸ்க் அணிந்து திருடிய கொள்ளையனை சிசிடிவி காட்சியைக் கொண்டு போலீசார் கைது செய்தனர்.
கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க மாஸ்க் அணிய வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. ஆனால் மக்கள் பலரும் மாஸ்க் அணிவதை விரும்ப மாட்டேன்கிறார்கள். சில குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்கள் மாஸ்கை கண்டிப்பாக அணியத் தொடங்கியுள்ளனர். பல இடங்களில் குற்றவாளிகள் மாஸ்க் அணிந்து திருடுவது போலீசாருக்கு சிக்கலாகவும் உள்ளது. அதேபோல் ஒரு சம்பவம் கொல்கத்தாவில் அரங்கேறியுள்ளது.
ரதன் பட்டாச்சாரியா என்ற நபர் வணிகவளாத்தில் புகுந்து பெண் ஒருவரின் கைப்பையை திருடியுள்ளார். அதில் ரூ.99 ஆயிரத்து 300 இருந்துள்ளது. முகத்தில் மாஸ்க் அணிந்து பெண்ணிடமிருந்து கைப்பையை திருடி விட்டு வெளியேறிவிட்டார். வெளியே சென்ற அவர் மாஸ்க்கை கழட்டிவிட்டு முகத்தை சொரிந்து உள்ளார். இது சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது. இதன் மூலம் போலீசார் அவரை தேடி கைது செய்துள்ளனர்.