பேஸ்புக்கை பயன்படுத்துவதற்கு இந்திய பெண்கள் அச்சப்படுவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மெட்டா நிறுவனத்தின் கீழ் பேஸ்புக் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வணிக வளர்ச்சிக்காக மாதம் தோறும் அல்லது காலாண்டுக்கு ஒரு முறை ஆய்வறிக்கைகளை வெளியிடும். கடந்த வருடம் மே மாதம் 50 லட்சம் பயனாளர்களைக் கொண்ட சமூக ஊடகங்கள், அதில் வெளியாகும் பதிவுகள் மீதான புகார்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை மாதம் தோறும் மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டது.
கடந்த 4 மாதங்களில் பேஸ்புக்கை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக மெட்டா நிறுவனம் கூறியுள்ளது. அதாவது இந்தியாவில் பேஸ்புக்கை பயன்படுத்தும் பெண்கள் பாலியல் ரீதியான அச்சுறுத்தல்களுக்கு ஆளாவதால், பேஸ்புக்கை பயன்படுத்துவதற்கு இந்திய பெண்கள் பயப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக பேஸ்புக் தளமானது ஆண்கள் மட்டுமே பயன்படுத்தும் சமூக வலைதள பக்கமாகவே இருக்கிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் போன்ற செயலிகளை விட பேஸ்புக்கை பயன்படுத்துவதற்கு பெண்கள் அதிக அளவில் பயப்படுவதாக மெட்டா நிறுவனம் கூறியுள்ளது.
இதனையடுத்து இந்தியாவில் உயர்த்தப்பட்ட தொலைதொடர்பு கட்டணமும் பேஸ்புக் பயன்பாட்டை வெகுவாக குறைத்துள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள 79% பெண்கள் பேஸ்புக் பயன்பாட்டின் போது பாலியல் பிரச்சனை குறித்து பயப்படுவதாகவும், ஒரு பெண் தன்னுடைய புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த பிறகு முன் பின் தெரியாத 367 பேர் நட்பு அழைப்புகள் கொடுப்பதாகவும் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த மே மாதத்தில் மட்டும் 90.3 முறையற்ற கருத்து பதிவுகள், 20.6 லட்சம் ஆபாச பதிவுகள், 30.7 லட்சம் வன்முறையை தூண்டும் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் கூறியுள்ளது.