பேஸ்புக் மூலம் பழகி பெண் குரலில் பேசி பணம் பறித்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட, காவல்துறையினருக்கு பயந்து தப்பியோடிய இருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
சென்னையை சேர்ந்த தருண், ஆதி, நவீன், யுவராஜ் மற்றும் சதீஷ் ஆகிய 5 பேரும் வெவ்வேறு தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இருப்பினும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். இவர்களுக்கு முகநூல் மூலம் ஈரோட்டைச் சேர்ந்த சண்முகசுந்தரம் நண்பராக சேர்ந்துள்ளார். அவரிடம் பெண் குரலில் பேசி அசத்தியுள்ளார் தருண்.
இதையடுத்து பெண்ணை நேரில் பார்க்கும் ஆசையில் சென்னை வந்த சண்முக சுந்தரத்தை மாதவரம் ரவுண்டானா அருகே 5 பேரும் சந்தித்துள்ளனர். அப்போது சண்முக சுந்தரத்தை தாக்கியதோடு அவரிடம் இருந்த தங்கச் சங்கிலி, கை கடிகாரம் மற்றும் ஏடிஎம் கார்டை பறித்துக்கொண்டு ஏடிஎம் ரகசிய எண்ணையும் கேட்டு தெரிந்து கொண்டதன் பின்னர் சண்முக சுந்தரத்தை தருணும், நவீனும் பிடித்து வைத்துக் கொள்ள மற்ற மூவரும் பணம் எடுக்க ஏடிஎம் சென்ற நிலையில்,
இருவரிடம் இருந்து தப்பி சென்று ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினரிடம் நடந்ததைச் சொல்லி இருக்கிறார் சண்முகசுந்தரம். உடனே தருணையும், நவீனையும் கைது செய்தபோது ஏடிஎம்மில் இருந்து திரும்பி வந்த மற்ற மூவரும் இதனைக்கண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடியுள்ளனர்.
தப்பி ஓடிய மூவரும் கிழக்கு கடற்கரை சாலையில் காடையூர் பகுதியில் விபத்தில் சிக்கி, யுவராஜ், சதிஷ் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஆதி தலைமறைவாகிவிட்டார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். முகநூலில் நண்பர் போல பழகி பெண் குரலில் பேசி மயக்கி வரவழைத்து பறிக்கும் முயற்சியில் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.