கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு விளம்பரங்களை உலக சுகாதார அமைப்புக்கு இலவசமாக வழங்க பேஸ்புக் நிறுவனம் முடிவுசெய்துள்ளது.
சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகின்றது. 70க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரையில் கொரோனா வைரசால் 3,285 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் 95, 332 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு விளம்பரங்களை உலக சுகாதார அமைப்புக்கு இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் மற்றும் அதன் பரவல் பற்றிய துல்லியமான தகவல்களை பேஸ்புக் இலவசமாக விளம்பரம் செய்வது குறித்து உலக சுகாதார அமைப்பு மற்றும் நோய் கட்டுப்பாட்டுக்கான அமெரிக்க மையங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மார்க் ஜுக்கர்பெர்க் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த நிறுவனங்களைத் தவிர தம்மை அணுகும் வேறு எந்த நிறுவனத்துக்கும், நபர்களுக்கும் இந்த சலுகை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.