ஆஸ்திரேலியா அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் செய்திகளை பகிர்வதற்கு பேஸ்புக்கில் விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நிறுவனம் நீக்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகளுக்கு ஃபேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் உள்ளூர் செய்தி நிறுவனங்களுக்கு பணம் செலுத்த வேண்டும் என்ற சட்டத்தை அந்நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவில் கடந்த வாரம் பேஸ்புக் நிறுவனம் ஃபேஸ்புக்கில் செய்திகளுக்கு தடை விதித்துள்ளது. எனவே ஃபேஸ்புக்கில் செய்திகளை பார்க்கவும், பகிரவும் முடியாமல் ஆஸ்திரேலிய மக்கள் சிரமப்பட்டனர்.
மேலும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் பேஸ்புக் நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலிய அரசும் ஃபேஸ்புக் நிறுவனமும் இது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பிறகு பேஸ்புக் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று ஆஸ்திரேலிய அரசு சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டுவர ஒப்புக்கொண்டுள்ளது. அதன் பின்னர் ஆஸ்திரேலியாவில் பேஸ்புக்கில் செய்திகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையானது நீக்கப்பட்டுள்ளது.