இந்த ஆண்டுக்கான பெங்களூரு ஓபன் தொடர் பெங்களூருவில் நடைபெற்றது. இந்திய டென்னிஸின் அடையாளமாக திகழும் லியாண்டர் பயஸ் இந்த ஆண்டின் இறுதியில் டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்படி சொந்த மண்ணில் அவர் பங்கேற்ற கடைசி டென்னிஸ் தொடர் இதுவாகும்.
இந்நிலையில், இந்தத் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பயஸ் – மேத்யூ அப்டேன் (ஆஸ்திரேலியா) ஜோடி நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவின் பூரவ் ராஜா – ராம்குமார் ராமநாதன் ஜோடியை எதிர்கொண்டது.
சொந்த மண்ணில் பயஸ் விளையாடும் கடைசி போட்டியைக் காண ரசிகர்கள் ஏராளமானோர் மைதானத்துக்கு வருகை தந்து அவருக்கு ஆதரவு தந்தனர். இப்போட்டியில் பயஸ் ஜோடி 0-6, 3-6 என்ற நேர் செட் கணக்கில் பூரவ் ராஜா – ராம்குமார் ராமநாதன் ஜோடியிடம் தோல்வி அடைந்தது.
இதனால், சொந்த மண்ணில் களமிறங்கிய தனது கடைசி போட்டியில் பயஸ் தோல்வியுடன் விடைபெற்றார். இருப்பினும், தனது 16 வயது முதல் 46 வயது வரை இந்த 30 ஆண்டுகளாக டென்னிஸ் பயணத்தில் ஆடவர் இரட்டையர் பிரிவில் 54 பட்டங்கள், எட்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், கலப்பு இரட்டையர் பிரிவில் 10 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பட்டங்களை வென்றுள்ளார் பயஸ்.
இதுமட்டுமின்றி, 1996-இல் ஒலிம்பிக்கின் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம், ஒலிம்பிக்கில் டென்னிஸ் பிரிவில் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை லியாண்டர் பயஸ் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது