கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்து சென்ற இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைய ஆரம்பித்ததால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பதால் மார்க்கெட்டில் பணிபுரிபவர்கள் மற்றும் மார்க்கெட்டுக்கு தினமும் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களின் செல்போன் எண் மற்றும் முகவரி பெறப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 11ஆம் தேதி பரிசோதனை செய்தவர்களில் இரண்டு பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானதை அடுத்து அவர்கள் கொடுத்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என வந்துள்ளது.
மேலும் அவர்கள் தங்களது முகவரியை அரைகுறையாக கொடுத்துள்ளனர். இந்நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அந்த இரு நபர்களும் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியாமல் திணறுகின்றனர். எனவே கோயம்பேடு காவல் நிலையத்தில் போலி முகவரி கொடுத்து தப்பிய இரண்டு தொற்று பாதித்த நபர்களை கண்டுபிடித்து தருமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.