Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

போலி இ-பாஸ் தயாரிப்பு…. தலைமை செயலக ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது…!!

சென்னையில் போலி இ-பாஸ் தயாரித்து கொடுத்த அரசு ஊழியர்கள் 2 பேர் உட்பட 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

ரூ.3000 முதல் ரூ.5000 வரை பணம் பெற்றுக்கொண்டு போலி இ-பாஸ் தயாரித்து கொடுத்ததாக அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு, பொது போக்குவரத்துக்கு அரசு தடை விதித்திருந்தது. அவசர தேவைகளுக்காக வெளியே செல்பவர்கள் இ-பாஸ் பெற்று செல்லலாம் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் 4 மற்றும் 5ம் கட்ட ஊரடங்கு நீடிக்கப்பட்ட பொழுது சில இடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. அத்யாவசிய தேவைக்காக வெளியே செல்ல இ-பாஸ் வசதி பெறுவதற்காக பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை மாநகரத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்வதற்கு இ-பாஸ் பெற்று செல்லலாம் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் போலி இ-பாஸ்கள் தயாரிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 19ம் தேதி முதல் முழுஉரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பழைய இ-பாஸ்க்கு பதில் சற்று மாறுதல்கள் கொண்ட புதிய இ-பாஸ் பெறும் வசதிக்கு இணையத்தளம் உருவாக்கப்பட்டது.

ஆனால் புதிய இ-பாஸ் வழங்குவதிலும் முறைகேடு நடப்பதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவுத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் இ-பாஸ்களை முறைகேடாக தயாரித்து பலருக்கும் விற்றிருப்பது தெரியவந்துள்ளது.

அதில் சென்னை மாநகராட்சி ஊழியர், தலைமை செயலக பணியாளர், மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேட்டில் இன்னும் எத்தனை பேருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |