Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நான் ஒரு தொழிலதிபர்… இன்ஸ்டாவில் பல பெண்களிடம் மோசடி… சிக்கிய பிளேபாய்!

இன்ஸ்டாகிராம் மூலம் பெண் மருத்துவர் உட்பட பல பெண்களிடம் பழகி ஏமாற்றிய இன்ஜினியர் சுஜி கைது செய்யப்பட்டுள்ளார்

ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீடுகளில் இருக்கும் நிலையில் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் இமெயிலுக்கு சென்னை பெண் மருத்துவர் ஒருவர் புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் எஸ்பி ஸ்ரீநாத் நாகர்கோவிலை சேர்ந்த சுஜி என்பவரிடம் விசாரணை மேற்கொள்ள பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “பள்ளியில் படிக்கும் காலம் தொடங்கி இப்போது வரை பிளேபாய் போன்று பெண்களை வலையில் விழ வைப்பது அவர்களிடமிருந்து பணம் வாங்கி செலவழிப்பதுமாக இருந்து வந்துள்ளார் சுஜி. தந்தையின் கறி வியாபாரத்திற்கு உதவியாளராக இருந்து கொண்டு இணையதளத்தில் போலியாக ஒரு இன்ஸ்டாகிராம் அக்கௌன்ட்  தொடங்கி அதில் தான் ஒரு தொழிலதிபர் போன்றும் சமூக ஆர்வலர் போன்றும் வெளிக்காட்டியுள்ளார்.

சுஜியின் புகைப்படங்களுக்கு கமெண்ட் செய்யும் பெண்களுடன் தொடர்பு ஏற்படுத்தி அவர்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றி வந்துள்ளார். அந்த வரிசையில் சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவரும் சிக்கியுள்ளார். இதுகுறித்து பெண் மருத்துவரின் வழக்கறிஞர் புருஷோத்தமன் கூறுகையில், “இன்ஸ்டாகிராம் மூலம் சுஜியும் பெண் மருத்துவரும் பழகி வந்துள்ளனர். திருமணம் செய்துகொள்வதாக கூறி பெண் மருத்துவரிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாயை சுஜி வாங்கியுள்ளார்.

இந்நிலையில் சுஜியின் மாமாவிற்கு சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க பெண் மருத்துவர் உதவி செய்ததை தொடர்ந்து சென்னை வந்த சுஜி மருத்துவமனையில் இருந்த ஊழியர் ஒருவரையும் ஏமாற்றியுள்ளார். ஒரு சமயத்தில் சுஜியின் செல்போனை பார்த்த பெண் மருத்துவர் அதில் இருந்த பல பெண்களது புகைப்படங்களை பார்த்து சந்தேகம் கொண்டு சுஜியிடம் கேட்டுள்ளார். அதனை தொடர்ந்து இருவர் இடையே தகராறு ஏற்பட்டு பெண் மருத்துவர் பேசுவதை தவிர்த்துள்ளார்.

இதனை தொடர்ந்து சுஜி பெண் மருத்துவரிடம் பணம் கேட்டு மிரட்டி அவர் கொடுக்கவில்லை என்றதும் மருத்துவரின் தனிப்பட்ட புகைபடங்களை தொலைபேசி எண்ணுடன் சேர்த்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக பெண் மருத்துவருக்கு தொடர்ந்து வெவ்வேறு அழைப்புகள் வர தற்கொலை செய்துகொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு ஆறுதல் கூறி ஆன்லைன் மூலம் புகார் அளித்தோம். அதனடிப்படையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.”என கூறியுள்ளார்

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறை சம்பவத்தை போன்று சுஜியின் பின்னணியிலும் சிலர் இருக்கின்றனர். இந்தக் குழு வசதியான மற்றும் ஆதரவற்ற பெண்களை சமூக வலைதளங்களில் கண்டறிந்து ஏமாற்றுகின்றனர். தொலைபேசியில் இருக்கும் படங்களை வைத்து அந்த பெண்களிடம் விசாரணை மேற்கொண்டால் இன்னும் பல உண்மைகள் வெளிவரும் என நம்பப்படுகிறது. முன்னதாக அரசு அதிகாரி ஒருவரின் மகளும் இந்த கும்பலிடம் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |