பிரபல மூக்குப்பொடி தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் போலி மூக்குபொடி தயாரித்து விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் பிரபல மூக்குப் பொடி தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் போலியான முகவரியோடு மூக்கு பொடி தயாரிப்பு நடந்தது குறித்து தேனி காவல்துறையினருக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தார்கள். இதையடுத்து உத்தமபாளையம் அருகே உள்ள ஆனைமலையன்பட்டியை சேர்ந்த ராஜா என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர்.
அப்பொழுது அவர் மூன்று பேருடன் சேர்ந்து ஆனைமலையன்பட்டி, கம்பம், போடி உள்ளிட்ட பகுதிகளில் போலியான மூக்குப்பொடியை எந்திரங்கள் மூலம் தயாரித்து பிரபலமான மூக்குப்பொடி கம்பெனியின் முகவரியை ஒட்டி பேக்கிங் செய்து மாவட்டம் முழுவதும் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனால் அழகுராஜா, முத்தழகு உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 900 போலி மூக்குப்பொடி பாக்கெட்டுகள் மற்றும் பொடி தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.