நீட் மதிப்பெண் சான்றிதழில் மோசடியில் ஈடுபட்ட மாணவி தீக்ஷா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் வைத்து முதல் நீட் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் டிசம்பர் 7ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி தீக்ஷா தனது தந்தை பாலச்சந்திரனுடன் கலந்தாய்வில் கலந்து கொண்டுள்ளார். இந்த மாணவி நீட் தேர்வில் 25 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்த நிலையில் 610 மதிப்பெண் பெற்ற ரித்திகா என்னும் மாணவியின் மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்டுள்ளார். அவர் சமர்ப்பித்த சான்றிதழ் போலி என்று தெரியவந்ததும் மருத்துவக்கல்வி கூடுதல் இயக்குனரான செல்வராஜன் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் மாணவியின் தந்தை பல் மருத்துவரான பாலச்சந்திரன் ஜனவரி 1ம் தேதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
மேலும் பாலச்சந்திரனை நான்கு நாட்கள் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரித்தபோது போலி சான்றிதழை தயாரிக்க உதவிய இடைத்தரகர் பற்றி தெரியவந்தது. இதனையடுத்து மாணவி தீக்ஷா காவல் துறையினர் கையில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் தற்போது மாணவி பெங்களூரில் தனது உறவினர் வீட்டில் தலைமறைவாக இருப்பது தெரியவந்ததும் காவல்துறையினர் அவரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் மாணவி மற்றும் அவரின் தந்தை மீது 419, 420, 464, 465, 468, 471 ஆகிய 6 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.