போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இவர் காரோணவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக வதந்தி பரப்பிய வழக்கில் இவர் கைது செய்யப்பட்டார். வைத்திய முறைகள் குறித்து எவ்வித தகுதியும் பெறாமலேயே சிகிச்சை அளித்துள்ளார் என்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் தணிகாசலத்தை விடுவித்தால் போலி மருத்துவர்களை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும் எனக்கூறி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
தணிகாசலம் மீது மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சிறையில் உள்ள நிலையில் மேலும் 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். தணிகாசலம் மீது ஏற்கனவே 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில் காரோணவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக வதந்தி பரப்பிய சித்த மருத்துவர் தணிகாசலத்தை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில், தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் மூலமாக தன்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் எனவும், ஜாமீனுக்காக நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை தான் ஏற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி ரோஷன் துரை முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தணிகாசலத்தின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். தணிகாசலத்தை விடுவித்தால் போலி மருத்துவர்களை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும் என கருத்து தெரிவித்துள்ளார்.