திருமணம் செய்வதாக ஆசை கூறி நகை மோசடி செய்த வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் மஞ்சூரில் வசித்து வருபவர் கார்த்திக் ராஜ். திருவண்ணாமலையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வரும் இவர் தனக்கு மணமகள் வேண்டும் என்று இணையதளம் மூலம் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்தார். இதனைப் பார்த்த விதவைப் பெண்கள், திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என பலரும் கார்த்திக்கின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசினர்.
இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட கார்த்திக் தனக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்தவர்களிடம் தொடர்ந்து பேசி திருமண ஆசையை வளர்த்துள்ளார். அவ்வகையில் கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வரும் இளம் பெண்ணிடமும் இதே போன்று திருமணம் செய்து கொள்வதாக பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணைப் பார்க்க கோயம்புத்தூர் சென்ற கார்த்திக் தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறி 7 பவுன் தங்க நகையை வாங்கிச் சென்றுள்ளார்.
ஆனால் அதன்பிறகு அந்தப் பெண்ணிடம் அவர் நகையைத் திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் கொடுத்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் கார்த்திக் ராஜை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. கோயம்புத்தூரை சேர்ந்த இளம்பெண் உட்பட பலரிடம் திருமண ஆசை காட்டி நகை பணம் போன்ற மோசடிகளில் கார்த்திக் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “பெண்களிடம் நடித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி சினிமா பாணியில் பலருடன் பழகி உள்ளார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதமே அவர் இந்த விளையாட்டை தொடங்கியுள்ளார். தன்னை தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் பெண்களிடம் வங்கியிலிருந்து தனக்கு பணம் வர வேண்டி இருக்கிறது. அதற்கு சிறிது காலதாமதம் ஆகும். ஆனால் எனக்கு கடன் பிரச்சினையைத் தீர்க்க உங்கள் நகையை கொடுங்கள். நான் பணம் வந்ததும் கொடுத்து விடுகின்றேன் என்று கூறியுள்ளார்.
இவ்வாறு கோயம்புத்தூரில் மூன்று பெண்கள் ஈரோடு, பெரம்பூர், பொள்ளாச்சி, ராஜபாளையம், பெங்களூர், சிவகாசி என பல இடங்களில் உள்ள பெண்களை ஏமாற்றி 50 பவுன் நகை வரை கார்த்திக் மோசடி செய்துள்ளார். இவர் பெண்களிடம் ஏமாற்றி வாங்கும் நகையை அடகு வைக்க கார்த்திக்கின் நண்பர் பிரசாந்த் என்பவர் உதவி செய்துள்ளார். இதனை தொடர்ந்து திருவண்ணாமலையை சேர்ந்த பிரசாந்த் கைது செய்யப்பட்டு இருவரிடமிருந்து 13 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.