கரூர் அருகே போலி இ பாஸ் மூலம் சென்னைக்கு பயணம் மேற்கொள்ளவிருந்த ஓட்டுநர், உரிமையாளர் மற்றும் பயணிகள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் இருந்து சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதாக தொடர் விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்த உத்தரவிட, கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர், சென்னைக்கு செல்ல வேண்டும் என சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் நிறுவனத்தின் மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இதையடுத்து ரூபாய் 2000 மட்டும் பெற்றுக்கொண்டு இ பாஸ் எதுவும் இல்லாமல், அவரை சென்னை அழைத்துச் செல்ல அந்த டிராவல்ஸ் நிறுவனம் முன்வந்தது. இதை தொடர்ந்து அலுவலர் கொடுத்த தகவலின்பேரில், சென்னைக்கு கார் சென்று கொண்டிருக்கும் வழியிலே, காவல்துறையினர் காரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இதுகுறித்து விசாரணை மேற்கொள்கையில், போலி இபாஸ், மூலம் அவர்கள் அதிகாரிகளை ஏமாற்றி வாடிக்கையாளர்களை சென்னை அழைத்து சென்றது தெரிய வந்தது. இந்த செயல் கொரோனா பரவலுக்கு முக்கிய காரணமாக இருக்கும் என்பதால், டிராவல்ஸ் உரிமையாளர் தாமின், ஓட்டுனர் வெங்கடேஷ் மற்றும் இவர்களுடன் சென்னைக்கு பயணம் மேற்கொள்ளவிருந்த மூன்று அப்பாவி பயணிகள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 5 பேரையும் கைது செய்தனர். அரசின் உத்தரவை மீறி தவறான வழிகாட்டுதலின் படி யார் நடந்தாலும் அவர்கள் மீது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.