Categories
அரசியல் மாநில செய்திகள்

கொரோனா காலத்திலும் இப்படியா ? கொள்ளையடிக்கும் கும்பலிடம் சிக்கிய மாநிலம்…. ஸ்டாலின் கடும் தாக்கு ..!!

கொரோனா மரணத்தால் பொய்க்கணக்கு எழுதிய அரசு  அனைத்து திட்டங்களுக்கும் இதைப்போன்றே பொய்க்கணக்கு எழுதி இருக்கும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நாகை மாவட்ட பா.ஜ.க. பொதுச் செயலாளரும், பூம்புகார் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளருமான அமிர்த விஜயக்குமார் தற்போது திமுகவில் இணைந்து உள்ளார். அவருடன் சேர்ந்து பாஜக, அஇஅதிமுக, பாமக உள்ளிட்ட பல கட்சிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவர்கள் இருந்த கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளனர். அவர்களை வரவேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.

அப்போது  பேசிய அவர்  “நாகை மாவட்டத்தைச் சேர்ந்த அமிர்த விஜயகுமார் தலைமையில் பா.ஜ.க. மற்றும் மாற்று இயக்கங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் நிகழ்ச்சியில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.  நாடு தற்பொழுது என்ன  சூழ்நிலையில் உள்ளது என்பது உங்களுக்கே தெரியும். அது தெரிந்ததால் மட்டும் தான் மக்களை  காப்பாற்ற முடியும் என்ற எண்ணத்தோடு நீங்கள் திமுகவில் இணைந்து இருக்கிறீர்கள்.

மார்ச் மாதத்தில் இருந்து பரவி வரும் இந்த கொரோனாவை கட்டுப்படுத்த எந்த முயற்சியையும் மத்திய – மாநில அரசுகள் இதுவரை எடுக்கவில்லை. மேலும் இரு நாள்களாக நீங்கள் செய்திகளில் பார்த்திருப்பீர்கள்.  கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையையே தமிழ்நாடு அரசு மறைத்து விட்டார்கள்.

மரணத்திலேயே இவ்வளவு பொய்க்கணக்கு எழுதி இருப்பவர்கள், ஒவ்வொரு திட்டங்களுக்கும் ஒதுக்கும் பணத்தில் எவ்வளவு பொய்க்கணக்கு எழுதி இருப்பார்கள். கொரோனா காலத்திலும் கொள்ளையடிக்கும் ஒரு கும்பலிடம் மாநிலம் மாட்டிக் கொண்டது” என்றார். மேலும், சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகள் தொடங்கும்போது அதில் திமுக நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

Categories

Tech |