குடியரசு தினவிழா மைதானத்தில் குடும்பத்தோடு போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியில் உள்ள இடிந்தகரை கடற்கரை கிராமத்தில் வசிப்பவர் மேரி. இவருடைய மகன் சுமன் என்பவர் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்யும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு ஊரில் இருந்து அருகில் உள்ள குடோனுக்கு பைக்கில் தண்ணீர் கேன் எடுக்க சென்றபோது, எதிரே வந்த கார் அதிக ஒளி முகப்பு விளக்கு உடன் இவருடைய வாகனத்தின் மீது மோதுவது போல வந்துள்ளது. இதையடுத்து நிறுத்தப்பட்ட காரில் இருந்து வந்த அதே பகுதியை சேர்ந்த முன்னாள் அதிமுக பஞ்சாயத்து தலைவர் நவிஷன் மற்றும் சுமன் ஆகிய இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து இருவருக்கும் இடையே கைகலப்பாக மாறி உள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து சுமன் கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துமனையில் அனுமதி ஆகி நவிசன் மீது புகார் அளித்துள்ளார். இதுபோன்று சுமன் மீதும் கூடங்குளம் காவல்நிலையத்தில் நவிசன் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் சுமன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் கோபமடைந்த சுமனின் தாய் மேரி, மனைவி மற்றும் குழந்தைகள் என குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தன்னுடைய மகன் மீது பொய் வழக்கு போட்டு உள்ளதாக மனு கொடுக்க வந்துள்ளனர்.
இந்நிலையில் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் குடியரசு தினவிழா நடைபெற இருப்பதை அறிந்து அங்கு சென்று மைதானத்தின் நுழைவாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அனுப்பி வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.