விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் மண்டபத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா கலந்து கொண்டு 950 பயனாளிக்கு 1 கோடியே 75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
அப்போது பொதுமக்களிடையே பேசிய அமைச்சர்,ஏழைகளுக்கு எந்த நேரத்திலும் உதவி செய்கின்ற ஒரே அரசு அம்மாவின் அரசு எடப்பாடி அரசு. ஏழைகளுக்கு தேவையான திட்டங்களை பரிசீலனை செய்து உதவிகளை வழங்கி வருகிறது. தங்கம் விலை கூடியதால் கொடுக்க முடியாது என எதிர்கட்சிகள் பொய்யான வதந்திகளை கூறி வந்த நிலையில் அவற்றை பொய்யாக்கி தற்போது தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டு வருகிறது. 8 கிராம் வழங்க கூடிய நேரத்தில் அடுத்து 10 கிராம் தங்கம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கொடுக்கின்ற எண்ணம் படைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்.முயற்சி எங்களுடையது முடிவு உங்களுடையது. சொன்னதை செய்கின்றோம். எந்த நேரத்திலும் இலகுவாக அணுக கூடிய ஆட்சி அதிமுக ஆட்சி.கஷ்டப்படுபவர்களுக்கு பக்க பலமாக இருக்க கூடியவர்கள் நாங்கள். முதியவருக்கு ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்குவது அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.பொங்கலுக்கு 2500 ரூபாய் முதல்வர் வழங்கியது வரப்பிரசாதமாக ஆனது ஏழை எளிய மக்களுக்கு தெரியும்.இல்லாத மக்களுக்கு கொடுத்து சந்தோஷ படுபவர்கள் நாங்கள்.
இருப்பதை எடுத்து கொடுப்பவர்கள் நாங்கள் அதை கெடுப்பவர்கள் மற்றவர்கள்.நாங்கள் உங்களுக்காக உழைத்து கொண்டு இருக்க காத்திருக்கிறோம். கொரோனாவால் உலகமே இருண்ட நேரத்தில் வெளிச்சம் பாய்ச்சிய ஆட்சி அம்மாவின் ஆட்சி எடப்பாடி ஆட்சி அதிமுக ஆட்சி.
சிலர் வருவார்கள் போவார்கள் மக்களுக்கு ஒன்றும் செய்ய மாட்டார்கள் நாங்கள் மக்களுக்கு தேவையான வசதிகள், திடங்களை இந்த 5 ஆண்டுகளில் செய்திருக்கிறோம். இதை செய்தது எடப்பாடியின் அரசு. நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்று பார்த்து புரிந்து செயல்படுங்கள் என அமைச்சர் பொதுமக்களிடம் தெரிவித்தார்.