திருநெல்வேலி அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை அடுத்த பிஎம் சத்திரத்தை சேர்ந்தவர் சந்திரன். இவர் கொக்கிரகுளம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்றைய தினம் தாய் வீட்டிற்கு சென்றிருந்த லட்சுமியை அழைப்பதற்காக கொக்கிரகுளம் சென்றிருந்தார் சந்திரன். சென்ற இடத்தில் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த சந்திரன் அதே பகுதியில் உள்ள சிவன் கோவில் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பின் இது குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த போது உடலைக் காணவில்லை. லட்சுமி குடும்பத்தினர் எடுத்து சென்றதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்கு தருமாறு கேட்க, லட்சுமி குடும்பத்தினர் மறுத்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின் உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டு தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.