தீக்காயங்களுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள சைதாப்பேட்டை பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இனிப்பு கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருக்கு கண்ணகி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கவி வர்ஷன் என்ற மகனும், நட்சத்திரா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும் போது, திடீரென ராஜ்குமார் வீட்டில் இருந்து பயங்கர அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் ராமசாமி என்பவர் கதவை திறந்து பார்த்த போது, வீட்டிற்குள் ராஜ்குமார், கண்ணகி மற்றும் அவரது குழந்தைகள் என நான்கு பேரும் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடும் நிலையில் இருந்தனர்.
இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் நான்கு பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மருத்துவமனையில் கண்ணகிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் அவரது கணவர் மற்றும் குழந்தைகளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த குமரன் நகர் காவல் துறையினர் ராஜ்குமார் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்ய முயற்சி செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.