தேனி மாவட்டத்தில் ஆற்றில் அடித்து சென்ற மகளை காப்பாற்ற நினைத்த பெற்றோர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள சுங்கம் தெருவில் அபுதாகீர்(49), அவரது மனைவி அமீனா பேகம்(40), மற்றும் அவர்களது மகள் அனிஷா(12) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அபுதாகீர் ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து இவர்கள் 3 பெரும் சீலையம்பட்டியில் உள்ள முல்லை பெரியாற்று தடுப்பணையில் குளிப்பதற்காக 2 தினங்களுக்கு முன் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் குடும்பத்துடன் குளித்துக்கொண்டிருக்கும் போது சிறுமி அனிஷா ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அமீனா மற்றும் அபுதாகீர் உடனடியாக மகளை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அவர்களும் ஆற்றில் தத்தளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அங்கிருந்த இளைஞர்கள் சிலர் இவர்களை காப்பாற்ற ஆற்றில் குதித்த நிலையில் சிறுமி அனிஷாவை மீட்டுள்ளனர். இதனையடுத்து அவர்களால் அபுதாகீர் மற்றும் அமீனாவை காப்பாற்ற முடியவில்லை. இந்நிலையில் உயிரிழந்த அமீனா பேகத்தின் உடல் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
மேலும் அபுதாகீரின் உடல் கிடைக்காத நிலையில் அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து தொடர்ந்து 2வது நாளாக நடந்த தேடுதல் பணியில் உப்புக்கோட்டை முல்லைப்பெரியாற்றில் அபுதாகீரின் உடல் மிதப்பதாக தகவல் கிடைத்த நிலையில் தீயணைப்பு துறையினர் அங்கு சென்று அவர் உடலை மீட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.