தங்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தரக்கோரி குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சோமவாரப்பட்டி கிராமத்தில் வசந்தாமணி என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் வசந்தாமணி தனது குடும்பத்தினருடன் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் வசந்தாமணி மாவட்ட கலெக்டரிடம் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தை கடந்த 2015-ஆம் ஆண்டு யுவராஜ், ராம்குமார், பழனிசாமி ஆகியோரிடம் வாங்கிய கடனுக்காக 2 ஆண்டுகள் கால அவகாசத்துடன் கிரைய பத்திரம் செய்து கொடுத்துள்ளோம்.
ஆனால் போலி ஆவணங்களை வைத்து எங்களுக்கு தெரியாமல் எதிர்தரப்பினர் வேறு ஒரு நபருக்கு பத்திரத்தை கிரயம் செய்து கொடுத்துள்ளனர். எனவே எங்களுக்கு சொந்தமான நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வசந்தாமணி அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.