மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறுதலைபூண்டி கிராமத்தில் நடராஜன்-ராஜகுமாரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவருக்கு வெங்கடேசன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்ற இந்த குடும்பத்தினர் திடீரென தாங்கள் கொண்டு சென்ற மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளனர். இதனை பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் மூன்று பேரையும் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் மேல்மலையனூர் பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணிடம் நடராஜன் 4 லட்ச ரூபாய் கடன் வாங்கியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த பெண்ணின் தரப்பினர் அடமானம் செய்வதாக கூறி நடராஜனின் வீட்டை கிரையம் செய்துள்ளனர். இதனை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்து நியாயம் கேட்க சென்ற நடராஜனை அந்த பெண்ணின் தரப்பினர் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், அந்த புகாரை வாபஸ் பெற கூறி அந்த பெண்ணின் குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் நடராஜன் தெரிவித்துள்ளார். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நடராஜனின் குடும்பத்தினர் தற்கொலை செய்ய முயன்ற காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.