தமிழகத்தில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய மந்திரிகளின் தொடர் வருகைகள் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியுள்ளது. அதன் பிறகு தற்போது பிளவுபட்டு கிடக்கும் அதிமுகவில் டெல்லி மேலிடத்தின் உத்தரவு தான் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. டெல்லியின் உத்தரவை பொருத்து தான் அதிமுக யார் வசம் செல்லும் என்பது தெரியவரும். இந்நிலையில் சென்னையில் உள்ள கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளை அமித்ஷா சந்தித்து பேசியுள்ளார். அப்போது பாஜக நிர்வாகிகளுக்கு சில முக்கியமான அறிவுரைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.
அதாவது தமிழகத்தில் இரு பெரும் முக்கிய புள்ளிகளாக விளங்கிய கலைஞர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஜெயலலிதா மறைந்ததால் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுதான் களத்தில் இறங்கி வேலை செய்வதற்கான சரியான தருணம். அதன் பிறகு மத்திய அரசால் அறிமுகப் படுத்தப்பட்ட நலத்திட்டங்களை தமிழக மக்களிடம் எடுத்து கூறி அந்த திட்டத்தின் மூலம் எப்படி பயனடைய வேண்டும் என்பதையும் விளக்க வேண்டும். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியைப் பிடித்து விட்டால் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தாமரை மலர்வதோடு புதிய வரலாறு தமிழகத்தில் படைக்கப்படும்.
2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அதிகாரம் நம்முடைய கைக்கு வர வேண்டும். தெலுங்கானா மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் பாஜக தற்போது படிப்படியாக வளர்ச்சி அடைவதற்கு கீழிருந்து வேலை செய்துள்ளோம். அதே யுக்தியை தமிழகத்திலும் கடை பிடியுங்கள். தமிழகத்தில் தற்போது பிரதான கட்சிகளாக இருக்கும் திமுகவில் குடும்ப அரசியலும், அதிமுகவில் உட்கட்சி பூசல்களும் அதிகரித்துள்ளதால் இந்த தருணத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு பாஜகவின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அமித்ஷா சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது பாஜகவினருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த முக்கிய ஆவணத்தை அமித்ஷாவிடம் அண்ணாமலை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் டெல்லி விரைந்த பிறகு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. அல்லது வேறு ஏதாவது வழியில் ஆளும் கட்சிக்கு பிரஷர் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் எம்பி தேர்தலிலும் வெற்றி பெற்றுஅதன் பிறகு வரும் சட்டமன்ற தேர்தலிலும் தமிழகத்தில் பாஜகவின் கொடியை நாட்டுவதில் பாஜக முனைப்புடன் செயல்பட்டு கொண்டிருக்கிறது.