புதுக்கோட்டை மாவட்டத்தில் குடும்பத்தகராறில் மாமனார் மற்றும் மைத்துனரை மருமகன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நெருஞ்சிக்குடி பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சரண்யாவிற்கும் கானத்தான்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரபாகரனுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சரண்யாவுக்கு பிரபாகரனுக்கும் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக சரண்யா கோபித்துக் கொண்டு தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனைவியை தனது வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக பிரபாகரன் நெருஞ்சிகுடிக்கு சென்றுள்ளார்.
அப்போது மனைவி வீட்டில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பிரபாகரன் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாமனார் லட்சுமணன் மற்றும் மைத்துனர் சதீஷ்குமார் இருவரின் வயிற்றில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிச் சென்றுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் பிரபாகரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.