பொள்ளாச்சியில் நடிகை மாயமானது குறித்து சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் தொரட்டி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் நடிகையாக சத்யகலா என்பவர் நடித்து வந்தார். படப்பிடிப்பு நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென தனது தாய் தந்தைக்கு நான் நடிப்பது பிடிக்கவில்லை என்றும், எனக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார்கள் என்றும் தயாரிப்பாளரிடம் தெரிவிக்க, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் பாதி படப்பிடிப்பு நன்றாக முடிந்த நிலையில் திடீரென நடிகை மாயமாகியது படத்தின் தயாரிப்பாளர் ஷாமன் மித்ருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் மனு அளித்த அவர், நடிகை மாயமானது தொடர்பாக ஏற்கனவே புகார் அளித்து இருப்பதாகவும், அது குறித்து பொள்ளாச்சி காவல் ஆய்வாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், நடிகை சத்யகலா மாயமானதையடுத்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மேற்கொண்ட விசாரணைகள் குறித்து பொள்ளாச்சி காவல் ஆய்வாளர் நீதிமன்றத்திற்கு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, வருகின்ற ஆகஸ்ட் 5ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளது.