குடும்பத் தகராறில் மனமுடைந்த பிரபல சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாக இருப்பவர் ஜெயஸ்ரீ(32). இவர் ஏற்கெனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையுடன் வசித்து வந்தார். முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்த ஜெயஸ்ரீ, சீரியல் நடிகர் ஈஸ்வர் ரகுநாதன் என்பவரை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில், சமீபத்தில் தனது கணவர் ஈஸ்வர் ரகுநாதன் மீது வரதட்சணை புகார் அளித்திருந்த ஜெயஸ்ரீ, தனது சொத்து ஆவணங்களைத் திருடிய ஈஸ்வர் அவற்றை சூதாடித் தோற்று லட்சக்கணக்கில் வட்டிக்கு கடன் வாங்கியதாகவும், அதுகுறித்து தான் கேட்ட போது மேலும் பணம் கேட்டு அடித்து துன்புறுத்தியதாகவும் பரபரப்பு புகார் அளித்திருந்தார்.
மேலும், தனது கணவருக்கு வேறொரு சீரியல் நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் தனது கணவர் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும் காவல் துறையில் புகார் அளித்திருந்த நிலையில், ஈஸ்வர் ரகுநாதன் கைது செய்யப்பட்டு, பின் பிணையில் விடுதலை ஆனார்.
இந்த நிலையில், குடும்பத் தகராறு ஏற்பட்டதை அடுத்து, மனமுடைந்த ஜெயஸ்ரீ விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். முன்னதாக, அதிக அளவு தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டுவிட்டு, தனது நண்பர் ஒருவரைத் தொடர்புகொண்டு பேசிய ஜெயஸ்ரீ தற்கொலை செய்யப் போவதாகக் கூறியிருக்கிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்து ஜெயஸ்ரீ வீட்டிற்குச் சென்ற அந்த நண்பர் நீலாங்கரையிலுள்ள ஒரு மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளார். தற்போது, மருத்துவமனையில் ஜெயஸ்ரீக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.