பிரபல பாலிவுட் நடிகை இரண்டு கிராமங்களை தத்தெடுத்து அவர்களுக்கு உதவி செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலால் வேலை இல்லாமல் தவித்து வருபவர்களுக்கும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் நடிகர், நடிகைகள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றார்கள். இந்நிலையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது பிறந்த நாளை முன்னிட்டு மராட்டிய மாநிலத்தில் உள்ள பதார்தி, சக்கூர் ஆகிய 2 கிராமங்களை தத்தெடுத்து இருப்பதாக அறிவித்து இருக்கிறார். இலங்கை நடிகையான ஜாக்குலின் பாலிவுட்டில் அதிக படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் வெளியான சாஹோ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடியுள்ளார்.
கிராமங்களை தத்தெடுத்தது பற்றி ஜாக்குலின் பெர்னாண்டஸ் கூறுகையில், “ கொரோனா தொற்றினால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அனைவருக்கும் கடினமான காலம். பலர் அடிப்படை தேவைகளுக்கே போராடி வருகிறார்கள். மக்களுக்கு நம்மால் ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் 2 கிராமங்களை தத்தெடுத்து உள்ளேன்” என்று கூறியுள்ளார். இந்த கிராமங்களில் வசிப்பவர்களுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்குதல், வேலை வாய்ப்பு பயிற்சி, மருத்துவ சிகிச்சை கொடுத்தல் போன்ற பல பணிகளை ஜாக்குலின் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.