விழுப்புரம் அருகே கோபால்தாஸ் என்ற ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோபால்தாஸ் என்பவர் புதுவை தர்மாபுரியை சேர்ந்த பிரபல ரவுடி. இவர் திருந்தி தனியார் கம்பெனியில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஜெயந்தி, மாலதி என இரண்டு மனைவிகள் உள்ளனர். மாலதி புதுவையை சேர்ந்தவர். ஜெயந்தி விழுப்புரம் அருகே பூந்துறை எனும் கிராமத்தை சேர்ந்தவர். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஜெயந்தி வெளிநாட்டில் தற்போது வேலை பார்த்து வருவதால் தன்னுடைய இரண்டு மகள்களும் பூந்துறையில் உள்ள உறவினர்கள் வீட்டில் உள்ளனர்.
கோபால்தாஸ் தனது மகள்களை பார்ப்பதற்காக அடிக்கடி பூந்துறைக்கு வருவார். அதேபோல் நேற்று இரவு பூந்துறைக்கு வந்த கோபால்தாஸ் தனது மகள்களை பார்த்துவிட்டு புதுவை திரும்பும்போது திடீரென பலத்த மழை பெய்தது. எனவே தனது மகள்கள் தங்கியிருந்த வீட்டிற்கு எதிரில் உள்ள ஒரு கட்டிடத்தில் கட்டில் போட்டு படுத்திருந்தார். அப்போது கையில் கத்தி மற்றும் அருவாளுடன் 4 மர்ம நபர்கள் வந்தனர். அவர்களைப் பார்த்து கோபால்தாஸ் தப்பி ஓட முயன்ற போதிலும் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. அதன்பின் அவர் தலை மீது கற்களை தூக்கி போட்டதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
தமது திட்டம் நிறைவேறியதால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. சத்தம் கேட்டு வீட்டில் இருந்த அவரின் மகள்கள் ஓடிவந்தனர். தந்தை ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து கதறி அழுதனர். இச்செய்தி காட்டுத் தீயைப் போல் அப்பகுதியில் பரவியதால் கொட்டும் மழையிலும் ஏராளமானோர் அங்கு திரண்டனர். தகவல் அறிந்து கோட்டக்குப்பம் டிஎஸ்பி அஜை தங்கம் மற்றும் வானூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோரின் தலைமையில் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர். கோபால்தாஸ் உடலை கைப்பற்றி விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கொலையாளிகளை பற்றி துப்பு துலக்குவதற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. நாய்கள் பூந்துறையிலிருந்து புதுவை செல்லும் சாலைப் பக்கம் ஓடியது. எனவே கொலையாளிகள் அந்த திசையில் தப்பி சென்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் குறித்த விசாரணையில் மேலும் பரபரப்பூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு புதுவையைச் சேர்ந்த மாயவன் என்ற ரவுடியை கோபால்தாஸ் கொலை செய்துள்ளார். ஆகவே மாயவனின் நண்பர்கள் தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்படையில் கொலையாளியை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.