பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜுனா பண்ணை வீட்டில் எலும்பு கூடாக கிடந்த நபரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.
பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜுனா பல படங்களில் நடித்து வெற்றி கண்டவர். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதுமட்டுமில்லாமல் இவர் தமிழிலும் பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில் நடிகர் நாகார்ஜுனா தெலுங்கானாவில் மகபூப் நகர் மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டி கிராமத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் பண்ணை வீடு ஒன்றை சொந்தமாக வாங்கியுள்ளார். இந்த பண்ணை வீட்டுக்கு விவசாய பணிகளுக்காக சென்ற வேலை ஆட்கள் வேலையில் ஈடுபட்டிருக்கும் போது, ஒரு பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியதை அறிந்தனர்.
இதையடுத்து அவர்கள் நாகார்ஜுனாவின் வீட்டுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பின் நாகர்ஜுனா குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்துக்கு வந்து அங்கிருந்த பழையரூம் ஒன்றை சோதனை செய்தனர். அப்போது அந்த அறையில் மனித எலும்புக்கூடு ஒன்று கிடப்பதை கண்டு பிடித்தனர்.அதை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அங்கு தீவிர சோதனை செய்தபோது ஒரு ஆதார் கார்டு கிடந்தது.
அதை பார்த்த போது அது பாப்பிரெட்டி குடா கிராமத்தைச் சேர்ந்த சக்காலி பாண்டு (வயது 30) என்பவரது உடல் என்பது தெரியவந்தது. இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் தனது சகோதரர் உயிரிழந்ததால் சோகத்தில் இருந்த அவர் கடிதம் எழுதிவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர்கள் தெரிவித்தனர். ஆனால் அவர் எங்கு தற்கொலை செய்து கொண்டார் என்று எங்களுக்கு தெரியாது என்றும் இதுபற்றி போலீசாருக்கு புகார் அளிக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.