‘தீவண்டி’ என்ற மலையாளத் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சம்யுக்தா மேனன். இவர் தமிழில் ‘களரி, ஜுலை காற்றில்’ படங்களில் நடித்துள்ளார். மலையாள இளம் நடிகர் டொவினோ தாமஸ் உடன், இவர் இணைந்து நடித்த ‘தீவண்டி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த படத்தில் புகைப்பிடிக்கும் இளைஞராக வலம் வரும் டொவினோவுக்கு பலமுறை கன்னத்தில் பளார் என அறை விட்டு கோபக்காரப் பெண்ணாக நடித்து அசத்தியிருப்பார்,சம்யுக்தா.
சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தொகுப்பாளர், நீங்கள் யாரையாவது கன்னத்தில் அறைந்துள்ளீர்களா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். அதற்குப் பதிலளித்த சம்யுக்தா, ‘எனது தாய்க்கு சுவாசக்கோளாறு உள்ளது. புகைப்பிடிப்பவர்களுக்கு மத்தியில் நிற்கவே கூடாது. ஒருமுறை நானும் எனது தாயும் ஒரு இடத்தில் நின்றுகொண்டிருந்த போது, அங்கே ஒருவர் புகைப்பிடித்துக்கொண்டிருந்தார்.
நான் அந்த நபரிடம் சென்று இங்கே புகைப்பிடிக்காதீர்கள் என்று தயவோடு கேட்டுக்கொண்டேன். ஆனால், அவரோ என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனால் கோபமடைந்து அவரைப் பளார் என்று அறைந்தேன். அந்த சமயத்தில் நான் சினிமா துறையில் இல்லை’ என்று கூறியுள்ளார்.