பருவ நிலை மாற்றம் குறித்து பேசியபோது திடீரென கண்ணீர் விட்டு அழுத பாலிவுட் நடிகையும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான தியா மிர்சாவை ரசிகர்கள் கிண்டலடித்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் பங்கேற்றார் நடிகை தியா மிர்சா. அங்கு நடைபெற்ற குழு விவாதத்தின்போது பருவநிலை மாற்றம் குறித்து பேசினார்.
அப்போது தனது பேச்சுக்கு இடையில் திடீரென அவர் கண்ணீர்விட்டு அழுதார். இதையடுத்து, ‘நான் கண்ணீர் சிந்துவதுபோல் நடிக்கவில்லை. வேறொருவர் இடத்தில் நம்மை வைத்து நினைத்துப் பார்ப்பதை யாரும் தடுக்க வேண்டாம்.
எந்த சூழ்நிலையிலும் உங்கள் கண்ணீரை வெளிப்படுத்த அச்சப்படக்கூடாது. உணர்ச்சிகரமான விஷயங்களை முழுமையாக உணருங்கள். அவை உங்களுக்கு வலிமையை தரும்’ என்று இதற்கு விளக்கமளித்தார்.
ஆனால் தியா மிர்சாவின் விளக்கத்தை ஒருதரப்பினர் ஏற்காத நிலையில், சமூக வலைதளங்களில் அவரை கிண்டலடித்து வருகின்றனர். ‘நம்மூர் கிரெட்டா தன்பெர்க்கை பாருங்கள், நல்ல நாடகம்’ என்றெல்லாம் கருத்துகளை பதிவிட்டு தியா மிர்சாவை கலாய்த்துள்ளனர்.
இன்னொருவர், ‘நீங்கள் எதிர்காலத்தில் சுற்றுச்சூழலியலாளராக விரும்பினால், தண்ணீர் அதிகமாக பயன்படுத்திவிட்டு பணம் செலுத்தாமல் சில ஆண்டுகள் கழித்து டிவியில் அழுது, பேப்பர் பயன்படுத்தாதீர்கள் எனக் கூறலாம்’ என்று கருத்து பதிவிட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 2.26 லட்சம் வரை தண்ணீர் வரி பாக்கி வைத்திருப்பதாக ஹைதராபாத் பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் நடிகை தியா மிர்சாவுக்கு நோட்டீஸ் வழங்கிய விவகாரத்தை நினைவுகூரும் விதமாக இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதனிடையே அழுததற்கான நிஜ காரணம் குறித்து தியா மிர்சா கூறியதாவது,
ஜனவரி 26ஆம் தேதி எனக்கு சிறப்பாக சென்றது. அதிகாலை 3 மணியளவில் என்பிஏ விளையாட்டு வீரர் விபத்தில் இறந்தார் என்று எனது மொபைலுக்கு வந்த அதிர்ச்சி செய்தியால் மிகவும் பாதிப்படைந்தேன். அந்த செய்தி கேள்விப்பட்ட நாளில் எனது ரத்த அழுத்தம் சற்று குறைவாக இருந்ததால் அழுதுவிட்டேன். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விஷயங்கள் நம்மை பாதிக்கும். அவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். என்றார்.