விவசாயி தனது குடும்பத்தினருடன் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள திருவானைக்காவல் பகுதியில் விவசாயியான ரவிசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது. மேலும் அதே பகுதியில் கூலி தொழிலாளியான சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சீனிவாசனின் வீட்டிற்கு செல்லும் வழியில் 10 அடி நிலம் ரவிசங்கரின் ஒரு ஏக்கர் நிலத்தில் இருக்கின்றது. எனவே தனக்கு சொந்தமான 10 அடி இடத்தில் பொது பாதை அமைத்து தர வேண்டும் என சீனிவாசன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி 10 அடி இடத்தில் சீனிவாசன் குடும்பத்தினர் சென்று வர பாதை அமைக்க வேண்டும் எனவும், அங்கு மின் கம்பத்தை நட்டு உடனடியாக அவரது வீட்டிற்கு மின் விநியோகம் செய்து கொடுக்க வேண்டுமெனவும் அதிரடியாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி மின்வாரிய அதிகாரிகள் அப்பகுதியில் மின் கம்பம் நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ரவிசங்கர், தனது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் 12 பேருடன் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு சென்று உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது தங்கள் நிலத்தில் மின்கம்பம் நடக் கூடாது என ரவிசங்கரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.