தந்தைக்கு உணவு கொடுக்க சென்ற விவசாயி ஒருவர் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குண்டுபள்ளம் கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு தீபா என்ற மனைவியும், ஒரு வயது குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் ரவி தனது வீட்டிலிருந்து சங்கராபுரத்தில் இருக்கும் அப்பாவிற்கு சாப்பாடு கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது ராயக்கோட்டை பாதையில் சென்று கொண்டிருக்கும் போது அங்கிருந்த பள்ளத்தை கவனிக்காததால் மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்துள்ளார்.
இவ்விபத்தில் ரவியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் ஆண் ஒருவர் பள்ளத்தில் விழுந்து இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ரவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.