சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பியை உரசியதில் விவசாயி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தென்னேரி கிராமத்தின் மேட்டுத் தெருவில் சங்கர் என்ற விவசாயி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் வயல்களில் வேலைக்கு சென்றுவிட்டு கட்டவாக்கம் பகுதியிலிருந்து தென்னேரி பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து சாலையில் கீழே அறுந்து விலுந்திருந்த மின்கம்பி அவரின் மேலே உரசியதால் மின்சாரம் தாக்கி சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த தென்னேரி கிராம பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்தும், கிராம பொதுமக்கள் சாலையை மறித்து போராட்டம் செய்கின்றது பற்றியும் தகவலறிந்த காவல்துறையினர் அங்கே சென்று கிராம பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது வாலாஜாபாத்-சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலை, மஞ்சமேடு பகுதிகளில் தற்போது நடைபெறும் மேம்பால பணிக்காக மண் கொண்டு வந்து கொட்டி சென்ற லாரியானது சாலையின் குறுக்கே சென்றதால் மின்கம்பி அறுந்துள்ளது. இதுபற்றி மின்சார வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தும் உடனடியாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர். இதில் மேம்பாலம் கட்டுபவர்களின் அஜாக்கிரதை காரணத்தாலும், மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தாலும் இவ்விபத்து நடந்திருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
இதனால் மின்சாரத்திற்கு பலியான சங்கரின் மனைவியும் அவரின் இரு மகள்களும் தற்போது வாழ்வாதாரத்தை இழந்து விட்டதால் அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் மற்றும் உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசாரும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அரசுக்கு பரிந்துரைப்பதாக உறுதி அளித்ததன் காரணத்தினால் கிராம பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.