தேனி மாவட்டத்தில் மாந்தோப்புக்கு சென்ற விவசாயி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள போடி சந்தனமாரியம்மன் கோவில் தெருவில் நாகராஜன்(59) என்பவர் தனது குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு போடி அருகே உள்ள மங்கலகோம்பை பகுதியில் சொந்தமான மாந்தோப்பு உள்ளது. இந்நிலையில் நேற்று வழக்கம் போல நாகராஜன் மாந்தோப்புக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் நாகராஜனை தேடி மாந்தோப்புக்கு சென்றுள்ளனர்.
இதனையடுத்து மாந்தோப்பில் அவர் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதனை பார்த்து பதறிய அவரது குடும்பத்தினர் உடனடியாக குரங்கணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீஸ் துணை சூப்பிரண்டு அதிகாரி பார்த்திபன் மற்றும் காவல்துறையினர் நாகராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.