தானியங்களை உலர வைப்பதற்காக உலர் களம் அமைத்துத் தருமாறு அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்யும் 1500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் சோளம், கம்பு, மக்காச்சோளம் போன்ற மானாவாரி விவசாய பயிர்களை விவசாயம் செய்து, அந்த பயிர்களை உரிய இடம் இல்லாததால் சாலையில் போட்டு அதனை விவசாயிகள் உலர்த்துகின்றனர். இந்நிலையில் அந்த பயிர்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.
இது குறித்து அப்பகுதியில் வாழும் விவசாயிகள் கூறும்போது, இங்கு விளையும் தானியங்களை உலரவைக்க உலர் களம் இல்லாத காரணத்தால் அவற்றை சாலையில் கொட்டி உலர வைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இவ்வாறு சாலைகளில் தானியங்களை கொட்டுவதால் வாகன ஓட்டிகள் அவதிபடுவதுடன், விவசாயிகளும் மிகுந்த சிரமப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே இங்கு விளைவிக்கப்படும் மக்காச்சோளம், கம்பு, சோளம், பயறு போன்ற தானியங்களை உலர்த்துவதற்கு உலர் களம் அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் விவசாயிகளின் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.