ஊரடங்கு நேரம் என்பதால் பூ விற்பனை ஆகாமல் விவசாயிகள் சாலையில் கொட்டி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோவிலூர், அடிலம், நாகனம்பட்டி, முக்குலம், கும்பார அள்ளி, மொட்டலூர், தீண்டல், காரியமங்கலம், கோவிலூர், பெரியாம்பட்டி ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் விவசாயிகள் அதிகளவில் பூ சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப் பகுதிகளில் செண்டுமல்லி, கனகாம்பரம், பட்டன் ரோஸ், கோழிக்கொண்டை பூ, அரலி, குண்டு மல்லி, செண்டுமல்லி, சம்பங்கி போன்ற பல்வேறு வகையான பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்தப் பூக்களை சேலம், கிருஷ்ணகிரி, பெங்களூர், ஓசூர் ஆகிய பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இதனையடுத்து கொரோனா பரவல் காரணத்தால் பெங்களூர், ஓசூர் ஆகிய பகுதிகளில் பூ சந்தை மூடப்பட்ட நிலையில் பூக்களை வாங்க வியாபாரிகள் வராத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதில் ஒரு கிலோ குண்டு மல்லி 80 ரூபாய்க்கும், சம்பங்கி 10 ரூபாய்க்கும், சின்ன மல்லி 70 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வந்துள்ளது. அதன்பின் கவலை அடைந்த விவசாயிகள் அனைத்துப் பூக்களையும் சாலையில் கொட்டி சென்றுள்ளனர்.
இது தொடர்பாக பூ விற்பனை செய்யும் விவசாயிகள் கூறும் போது ஊரடங்கு காலத்தில் பூ சந்தை மூடப்பட்டதால் மற்றும் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் வியாபாரிகள் பூக்களை வாங்க வருவதில்லை என கூறியுள்ளனர். அதன்பின் பூ விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் விவசாயிகள் அனைத்துப் பூக்களையும் பறித்து சாலையோரம் மற்றும் விலை நிலங்களில் அதிக அளவில் கொட்டி வருகிறோம் என கவலையுடன் தெரிவித்துள்ளனர்.