புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கினால் வெள்ளரிக்காய் விற்பனை செய்ய முடியாமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் நிவாரணம் வழங்க வேண்டி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நரிக்கொல்லைப்பட்டி, அரவம்பட்டி, உரியம்பட்டி மற்றும் நரங்கியன்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 50 ஏக்கரில் நாட்டு வெள்ளரிக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. அந்த வெள்ளரிக்காய் சாகுபடி செய்வதற்கு விதை நடவு, உழவு, தொழு உரம், பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல், களையெடுத்தல் என ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமலபடுத்தப்பட்டுள்ளதால் வெள்ளரிக்காயை விற்பனை செய்ய முடியாமல் செடியிலேயே மாடுகள் மேய விட்டுள்ளோம். இதனால் லட்சகணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் குறைந்த அளவு தொகையாக 20 ஆயிரமாவது நிவாரணம் வழங்க வேண்டுமென தமிழக அரசிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.