தமிழகத்தில் நாளை உள்ளாட்சி தினம் கொண்டாடப்படுவதால் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 1-ம் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டத்தை முன்னிட்டு தமிழக வேளாண் துறை சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, நாளை நடைபெறும் கூட்டத்தின் போது வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஒரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப் படுவார்.
இவர் வேளாண்மை துறையின் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைப்பார். அதன் பிறகு அரசு செயல்படுத்தும் முக்கிய திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த விளம்பர பாதகைகள் வைக்கப்படுவதுடன் துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்படும். தமிழகத்தில் பல்வேறு திட்டங்களின் மூலம் பயனடைந்த விவசாயிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு கடந்த கிராம சபை கூட்டத்தின் போது வெளியிடப்பட்டது.
இதனையடுத்து கடந்த 2-ம் தேதிக்கு பிறகு பயன் அடைந்தவர்களின் பட்டியலும் நாளை நடைபெறும் கிராம சபை கூட்டத்தின் போது வெளியிடப்படும். இந்த பட்டியலின் மூலம் அரசின் திட்டங்கள் பயன் பெற்ற விவசாயிகளின் விபரத்தை பொதுமக்கள் தெரிந்து கொள்ள முடியும். மேலும் நாளை நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.