காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் விமான நிலையம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
சென்னை அருகே சர்வதேச விமான நிலையம் அமைக்க பரந்தூர் மற்றும் அதை சுற்றி உள்ள 12 கிராமங்களில் 4 ஆயிரத்து 700 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது பற்றிய செய்திகள் வெளியான நிலையில் அந்த கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் அனைவரும் விமான நிலையம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். நிலம் கையகப்படுத்தப்படுமோ என்ற அச்சத்தில் வீடுகளை விட்டு விவசாயிகள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
தலைமுறை தலைமுறையாக விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கும் தங்களுக்கு மாற்று இடம் கொடுத்தாலும் விளைநிலங்களை விட்டு தர மாட்டோம் என்று உறுதிபடக் கூறியுள்ளனர். எனவே, விமான நிலையம் அமைக்க மாற்று இடத்தை அரசு தேர்வு செய்ய வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.விளைநிலங்களை கொடுக்கபோவதில்லை என்றும் அவர்கள் கண்ணீர்மல்க கூறியுள்ளனர்.
சென்னையிலிருந்து வேலூர் செல்லும் சாலையில் காஞ்சிபுரத்தின் வேலகெட் என்ற இடத்தில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமம் தான் பரந்தூர். இப்பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கும் 4 ஆயிரத்து 700 ஏக்கர் நிலப்பரப்பில் 50% தமிழக அரசிடம் உள்ளது. எனவே விமான நிலையம் அமைக்க தேவையான இடத்தை விவசாயிகளிடமிருந்து அரசு கையகப்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.