Categories
மாநில செய்திகள்

விவசாயிகள், வியாபாரிகளுக்கான கட்டணங்கள் ரத்து : அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு..!

தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கான சலுகைகளை மே 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கிடங்கு கட்டணம், ஒரு சதவீத சந்தை கட்டணம் உள்ளிட்டவற்றை ரத்து செய்து விவசாயிகளுக்கு சலுகையை தமிழக அரசு நீடித்திருந்தது. ஊரடங்கு அமலில் உள்ள சமயத்தில் விவசாயிகள் இதனை பயன்படுத்தி தங்களது விளைபொருட்களை இந்த மாதம் இறுதி வரை அதாவது மே 31ம் தேதி வரை இதில் சேமித்து கொள்ளலாம் என்றும் இதற்கு கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

அதன் படி, காய்கறி, பழங்கள் போன்ற விளைபொருட்களை குளிர்பதன கிடங்குகளில் பாதுகாக்கும் கட்டணம் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக கடந்த ஏப்.7ம் தேதி தமிழக அரசு அறிவித்தது. அதேபோல, விவசாயிகளிடம் வசூலிக்கப்படும் பயன்பாட்டு கட்டணத்தொகை முழுவதையும் அரசே ஏற்கும் என்றும் விளை பொருட்கள் சேமிப்பு கிடங்கு கட்டணம் ரத்து, கூடுதலாக ஒரு மாதம் நீட்டிக்கப்படுகிறது என்றும் அறிவித்தது.

இதேபோன்று, வியாபாரிகள் செலுத்தும் ஒரு சதவீதம் சந்தை கட்டணம் மே மாதம் இறுதி வரை ரத்து செய்யப்படும். பொருளீட்டு கடன் வசதியும் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Categories

Tech |