நாட்டில் ஒருவர் கூட பசியுடன் உறங்கக்கூடாது என்பதற்காகவே தொற்றுநோய் காலத்திலும் விவசாயிகள் பணியாற்றி வருகின்றனர் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நமது பாரம்பரிய மருத்துவமுறைகளை கைவிடுவது துரதிர்ஷ்டவசமானது, சொந்த பலத்தையே நாம் நம்புவதில்லை என கூடியுள்ளார். நெருப்பை மிச்சம் வைக்கக் கூடாது, அதை முற்றிலுமாக அணைக்க வேண்டும் என கொரோனா தடுப்பு குறித்து தெரிவித்துள்ளார். ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவுக்கு தங்களுடைய பங்களிப்பை அளித்து வருகின்றனர் என்றும் ஆட்டோ ஓட்டுனர், ரிக்ஷாக்காரர் போன்றவர்களின் முக்கியத்துவத்தை இப்போது நாம் உணர்ந்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஒருவர் கூட பசியுடன் உறங்கக்கூடாது என்பதற்காகவே தொற்றுநோய் காலத்திலும் விவசாயிகள் பணியாற்றி வருகின்றனர். கொரோனாவால் முக கவசம் என்பது நமது வாழ்வின் அங்கம் ஆகிவிட்டது, முக கவசம் அணிவதாலேயே ஒருவர் நோயாளி என நினைக்க கூடாது என பிரதமர் தகவல் அளித்துள்ளார். கொரோனாவுக்கு எதிரான மக்களின் போராட்டம், மக்களால் நடத்தப்படும் போர் என்றும் கொரோனாவுக்கு எதிராக மக்களால் நடத்தப்படும் போர் நிச்சயம் வெல்லும் என நம்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர். பொதுமக்களின் ஒத்துழைப்புடன் அரசு நிர்வாகங்கள் இணைந்து கொரோனாவை எதிர்த்து போரிட்டு வருகின்றன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களை தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள மோடி, கொரோனாவில் இருந்து உலகம் மீண்டுவிட்டது என்ற நல்ல செய்தியுடன் அடுத்த முறை பேசுகிறேன் என தெரிவித்துள்ளார்.