செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், வருகிற அக்டோபர் 2 தமிழகம் தழுவிய அளவில் அனைத்து ஒன்றியங்களிலும் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க பேரணியை நடத்துகின்றோம். காந்தியடிகள் பிறந்தநாள், அவரை சுட்டுக்கொன்ற பாசிச சக்திகள் இன்றைக்கு இந்தியா முழுவதும் காந்தியடிகளை ஓரம் கட்ட கூடிய வகையில்,
வரலாற்றில் இருந்து அப்புறப்படுத்தக் கூடிய வகையில்.. அவருக்கு எதிரான சமூக விரோத சக்திகளை எல்லாம் உயர்த்தி பிடிக்கிறப்போக்கு தலை விரித்து ஆடுகின்றது. அது மிகவும் அதிர்ச்சியை தருகிறது.காந்தியடிகளுக்கும், புரட்சியாளர் அம்பேத்கருக்கும் நேரடியான கருத்து மோதல்கள் நிகழ்ந்திருக்கின்றன. இன்றைக்கு வரலாற்றில் மிக முக்கியமான நாள்.
புனே ஒப்பந்த நாள். காந்தியடிகள் – புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களும் இரவாடா சிறைச்சாலையில் தொடர்ச்சியாக நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக, ஒரு ஒப்பந்தம் உருவானது. அந்த ஒப்பந்தம் தான் பூனே ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. பூனே ஒப்பந்தம் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதாக இருந்தது.
அவருடைய கனவுகளை சிதைத்தது என்பதுதான் உண்மை. வரலாற்று உண்மை. அப்படி நேரடியாக காந்தியடிகளுக்கும், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கும் கருத்தியல் முரண்பாடு இருந்தாலும், காந்தியடிகள் இந்திய மண்ணின் விடுதலைக்கு தன்னையே ஒப்படைத்துக் கொண்டவர் என்பதை உலகம் அறியும்.அப்படிப்பட்ட ஒரு விடுதலைப் போராட்ட வீரரை ஆர்.எஸ்.எஸ் கும்பல் கொச்சைப்படுத்துவதும், வரலாற்றில் இருந்து அவரை இருட்டடிப்பு செய்வதற்குமான முயற்சியில் ஈடுபடுவதும் வேதனைக்குரியது, கண்டனத்திற்குரியது.
அவருடைய பிறந்த நாளில், அவர்கள் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பை நடத்த அனுமதி கேட்டிருக்கிறார்கள். உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கலாம் என்று தீர்ப்பு அளித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறதுஎன தெரிவித்தார். நேற்று தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி மற்றும் விடுதலை சிறுத்தைகள் நடத்தும் பேரணிக்கு தமிழக அரசு அனுமதியை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.