இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசையில் காத்து கிடப்பது பிரச்சினையாக இருந்து வந்தது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பாஸ்டேக் கட்டண முறை அமலுக்கு வந்தது. இதன் மூலம் இந்த கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தலாம் என்பதனால் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. பல வாகனங்கள் பாஸ்டேக் முறைக்கு மாறியிருந்தாலும் அந்த அக்கவுண்டில் ரீசார்ஜ் செய்யாமலிருப்பது, செயல்படாத பாஸ்டேக் வைத்திருப்பது போன்ற பிரச்சினைகளும் இருக்கின்றன.
இந்நிலையில் பாஸ்டேக் வைத்திருப்பவர்கள் முக்கியமான ஐந்து விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில் இரண்டு மடங்கு கட்டணத்தை செலுத்த நேரிடும். அவை என்னவென்று இப்போது பார்க்கலாம்.
உங்களிடம் ஃபாஸ்டாக் இல்லாமல் வாகனத்தை சுங்கச்சாவடியின் ஃபாஸ்டாக் பாதையில் ஓட்டிச் சென்றால், நீங்கள் டோல் தொகையை விட இரண்டு மடங்கு கூடுதலாகக் கட்டணம் செலுத்த வேண்டும். குறைந்த பேலன்ஸ் காரணமாக உங்களது ஃபாஸ்டாக் வேலை செய்யவில்லையென்றாலோ அல்லது ஃபாஸ்டாக் சேதமடைந்துவிட்டாலோ நீங்கள் ஃபாஸ்டாக் லயனில் செல்லக் கூடாது. அப்படிச் சென்றால் இரு மடங்கு கட்டணம் செலுத்த நேரிடும்.
உங்களது வாகனத்துக்கு மூன்றாம் தரப்பு காப்பீடு எடுத்திருந்தால் அதற்கும் ஃபாஸ்டேக் தேவைப்படும். இதற்கு முன்பு அப்படிப்பட்ட விதிமுறை இல்லை. புதிய விதிமுறைப்படி, உங்களது காருக்கு காப்பீடு எடுக்கும்போது ஃபாஸ்டாக்கிலும் கவனம் செலுத்த வேண்டும். எந்தவொரு வாகன உரிமையாளரும் ஒரே ஃபாஸ்டாக்கை வெவ்வேறு வாகனங்களுக்கு பயன்படுத்தக் கூடாது. ஒரு ஃபாஸ்டாக் ஒரு வாகனத்துக்கு மட்டுமே. உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் இருந்தால், ஒவ்வொரு வாகனத்திற்கும் தனித்தனியாக பாஸ்டேக் பொருத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட சுங்கச்சாவடி வழியாக தொடர்ந்து அல்லது அடிக்கடி பயணம் செய்தால் மாதாந்திர பாஸ் பெற்று பயணம் செய்வதும் சிறந்தது.