ஆட்டோ டிரைவர் குடிபோதையில் மனைவி மற்றும் மாமனாரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள ராயப்பேட்டை பகுதியில் முசாபர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கவுசி நிஷா என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு 21 வயது மகள் இருக்கின்றார். இந்நிலையில் தனது கணவரை விட்டு பிரிந்த நிஷா அதே பகுதியில் வசிக்கும் ஆட்டோ டிரைவரான அப்துல்காதர் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். அதன்பின் தனது மகள் மற்றும் இரண்டாவது கணவருடன் நிஷா வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட போது கோபத்தில் தனது மகளை அழைத்துக் கொண்டு நிஷா ராயப்பேட்டை பகுதியில் உள்ள முகமது உசேன் தெருவில் இருக்கும் தனது தந்தையான முசாபர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து அப்துல் காதர் குடிபோதையில் கையில் பீர் பாட்டிலுடன் தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது நிஷாவை அவர் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதால் முசாபர் அவரை கண்டித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த அப்துல்காதர் மாமனார் முசாபரின் தலையில் வீட்டில் இருந்த குக்கரை எடுத்து ஓங்கி அடித்ததோடு, பீர் பாட்டில்களும் அவரை தாக்கியுள்ளார். மேலும் அவர் கோபத்தில் தனது மனைவி நிஷாவின் கழுத்தில் கத்தியை எடுத்து வெட்டி விட்டார். இதனால் முசாபரும், நிஷாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஜாம்பஜார் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடலையும் கைப்பற்றி ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்துல் காதரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.